முஹ்யித்தீன் ஆண்டவரின்(?) மாதம்!
Monday, March 7, 2011
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
நபி (ஸல்) அவர்களின் பிறந்த மாதமாகிய ரபியுல் அவ்வல் முடிந்து விட்டது. பித்அத்களையும் பிறமத கலாச்சாரங்களையும் பின்பற்றுபவர்கள் ரபியுல் அவ்வல் மாதம் முழுவதும் மீலாது விழா என்ற பெயரில் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளில் இல்லாத பல புதிய அனாச்சாரங்களை நிறைவேற்றினர். அதை அடுத்து வந்திருக்கின்ற இந்த ரபியுல் ஆகிர் மாதத்தில் ரபியுல் அவ்வல் மாதத்தில் சிலர் நிறைவேற்றிய அனாச்சாரங்களுக்குப் போட்டியாக இந்த மாதத்திலும் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நோக்கில் முஹ்யித்தீன் அப்துல் ஜீலானியின் (ரஹ்) நினைவு தினத்தைக் கொண்டாடும் விதமாக இம்மாதம் முழுவதும் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்)நினைவு மாநாடு நடத்துகின்றனர்.
இவ்வகை மாநாடுகளில் மீலாது விழாக்களில் நடக்கும் அனாச்சாரங்களை எல்லாம் மிஞ்சி விடும் அளவிற்கு எல்லை மீறி ஷிர்கின் உச்சக்கட்டத்தை அடைகின்றனர்.
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஊர்களில் உள்ளவர்கள் ரபியுல் ஆகிர் மாதத்தில் முதல் பதினோரு நாட்களுக்கு முஹ்யித்தீன் ஆண்டகையை? (அவர்கள் அப்படித்தான் அழைக்கின்றனர்) நினைவு கூறும் முகமாக அவர்கள் பெயரில் கொடி ஏற்றி, தபரூக் வழங்கி, பயான் நிகழ்ச்சி நடத்துகின்றனர். இதில் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானியின் (ரஹ்) வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் இறைவனையும் மிஞ்சிய ஆற்றலுள்ளவராக அவரைச் சித்தரித்து கற்பனைக் கதைகளை முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்களின் கராமத் (அற்புதங்கள்) என்று கட்டவிழ்த்து விடுகின்றனர். பிறகு பதினோராம் நாளின் இறுதியில் நபி (ஸல்) அவர்களின் மீலாது விழா மாநாட்டை மிஞ்சும் அளவிற்கு பெரிய மாநாடு நடத்துகின்றனர்.
இந்த மாநாட்டின் இறுதியில் அனைவரும் எழுந்து நின்று ‘யா கவ்துல் அஃலம் யா முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி’ என்று ஒட்டு மொத்தமாக உரக்கக் கூவி அவரை ஆயிரத்து ஒரு (1001) முறை அழைக்கின்றனர். அவ்வாறு அழைக்கும் போது முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவ்விடத்திற்கு பிரசன்னமாகி ஒவ்வொருவரும் தம் மனதில் என்ன நாட்டத்தை நினைத்து அவரை அழைத்தாரோ அதை நிறைவேற்றுகிறார் என்று நம்புகின்றனர்.
இதைவிட மிகவும் மோசமானது என்ன வென்றால் முஹ்யித்தீன் ராத்திபு என்ற பெயரில் சிலர் இரவில் வட்டமாக அமர்ந்து தங்களுக்கு முன் ஒரு பெரிய தட்டு ஒன்றில் சில மாவுகளை தூவிவிட்டு பின்னர் விளக்குகளை எல்லாம் அனைத்து விட்டு மேற்கூறியவாறு முஹ்யித்தீன் ஆண்டகையை ஆயிரத்து ஓர் முறை அழைக்கின்றனர். அவ்வாறு அழைத்து முடித்ததும் பின்னர் விளக்கின் வெளிச்சத்தில் பார்த்தால் மாவு தூவப்பட்ட அந்த தட்டில் ஒருவரின் காலடித்தடம் இருக்கிறது. அந்த காலடித்தடம் முஹ்யித்தின் அப்துல் காதர் ஜீலானி அவர்கள் அங்கு வருகை தந்ததற்கான அடையாளமாம்.
மேலும் அவ்வாறு அவரை ஆயிரத்து ஓர் முறை இருட்டில் அழைத்துக் கொண்டிருக்கும் போது ஓர் ஒளி தென்படுமாம்! அதுவும் பக்தியுடன் அழைப்பவருக்கு மட்டும் தான் அந்த ஒளி தென்படுமாம். அந்நிகழ்ச்சி முடிந்ததும் அந்த ஒளியை நீ பார்த்தாயா? என்று அதில் கலந்துக் கொண்டவர்களைப் பார்த்து ஒவ்வொருவராக அந்த நிகழ்ச்சியின் கலீபா (அதை தலைமை தாங்கி நடத்துபவர்) கேட்பார். அனைவரும் பேந்த பேந்த விழ்த்துக் கொண்டு நான் பார்த்தேன் என்று கதையளப்பார்கள்.
இதை கற்பனையாக நான் எழுதுவதாக யாரும் நினைக்க வேண்டாம். நான் அவர்களுள் ஒருவனாக அறியாமையில் மூழ்கியிருந்தபோது இந்த வகை ராத்திபுகளில் பங்கு கொண்டிருக்கின்றேன். அதற்காக கருனையாளாகிய அல்லாஹ் என்னை மன்னித்தருள வேண்டும் என அவனிடம் மன்றாடுகிறேன். கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் அவர்கள் இத்தகைய அறிவீனமான செயல்களை இன்னமும் செய்து கொண்டுதானிருக்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியைக் காட்டுமாறு பிரார்த்திப்போமாக!
இதைவிடக் கொடுமை என்னவென்றால் நாகை, தஞ்சை, திருவாரூர் (எனக்குத் தெரிந்த மாட்டங்கள்) போன்ற மாவட்டங்களில் உள்ளவர்களில் பலர் தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரும் போது அவர்களை அறியாமல் அவர்களின் வாயிலிருந்தும் உதிரும் வார்த்தை என்ன வெனில் ‘யா முஹ்யித்தீன்’. அதாவது நம்மையறியாது ஒரு ஆபத்து நிகழும் போது நாம் ‘யா அல்லாஹ்’ என்று இறைவனை அழைத்து உதவி தேடுவது போல் அவர்கள் முஹ்யித்தீனை அழைத்து அந்த ஆபத்திலிருந்து அவர்களைக் காக்குமாறு வேண்டுகின்றனர். இன்றளவும் பலர் இதை தொடர்ந்து செய்கின்றனர்.
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் ‘அவனைத் தவிர வேறு ஒருவரை அழைப்பவர்கள் மிகுந்த வழிகேட்டில் இருக்கிறார்கள்’ என்று கூறுகிறான்.
“கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது. அன்றியும் மனிதர் ஒன்று கூட்டப்படும் (அந்நாளில்) இவர்கள் அவர்களுடைய பகைவர்களாக இருப்பர்; அவர்கள் தங்களை வழிபட்டுக் கொண்டு இருந்ததையும் நிராகரித்து (மறுத்து) விடுவர்.” (அல்-குர்ஆன் 46:5-6)
இவ்வாறு அழைக்கப்படுபவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்வதற்கு சக்தியற்றவர்களாக இருக்கின்றனர் என அல்லாஹ் கூறுகிறான்: -
“அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.(அல்-குர்ஆன் 35:13-14)
இணை வைத்தவர்களுக்கு மன்னிப்பே கிடைக்காது!
”நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிப்பதை மன்னிக்க மாட்டான்அதற்கு கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்கிறார்.” (திருக்குர்ஆன், 004:048,116)
(குர்ஆன் ஹதீஸ் போதாதவர்களுக்கு)
இப்னு அல்-கைய்யூம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இறந்தவர்களை அழைத்து தேவைகளை கோருவது, அவர்களின் உதவியை நாடுவது, அவர்களின் பால் திரும்புவது ஆகியவைகள் அனைத்தும் ஷிர்கின் (இணை வைத்தலின்) வகைகளாகும். இவைகள் தான் ஷிர்கின் (இணை வைத்தலின்) முக்கிய அடிப்படைகளாகும். ஆதாரம் : பத்-அல் மஜீத்
அல்லாஹ் முஸ்லிமான நம் அனைவருக்கும் அவனுடைய கருணையை பொழிந்து இணை வைக்கும் படுபயங்கர செயல்களிலிருந்து நம்மைக் காத்தருள்வானாகவும்.
0 கருத்துரைகள்:
Post a Comment