இதுதான் தவ்ஹீத் (ஏகத்துவம்) கூறும் கோட்பாடுகள்.
Thursday, February 24, 2011
தவ்ஹீத் என்ற வார்த்தையையும் தவ்ஹீதின் கோட்பாட்டை எத்திவைப்பவர்களுடைய பேச்சையும் கேட்டாலே போதும் முஸ்லிம்களில் இணைவைப்பாளர்களுக்கு மத்தியில் ஒருவிதமான கோபம் உருவாவதை தெளிவாக உணரலாம்.
பெரும்பாண்மையான இணைவைப்பாளர்கள் தவ்ஹீதை எவ்வாறு உணர்ந்துள்ளார்கள்? தவ்ஹீத் தரும் படிப்பினையை எத்திவைப்பவர்கள் மீது இவர்களுக்கு ஏன் கடுங்கோபம் ஏற்படுகிறது என்பதை உணர்ந்துக் கொண்டால் இந்த பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வு கிடைக்கும் (இன்ஷா அல்லாஹ்)! வாருங்கள் இதுபற்றி அலசுவோம்!
தவ்ஹீத் எதை போதிக்கிறது
தவ்ஹீத் என்பதற்கு ஏகத்துவம் என்று பொருள்படும் அதாவது ஏகனாகிய அல்லாஹ்வை பற்றி இஸ்லாம் கூறும் சித்தாந்தம் இதோ:
- அல்லாஹ் தனித்தவன், இணை துணையில்லாதவன்,
- அல்லாஹுக்கு நிகர் அவனே
- அல்லாஹுக்கு நிகராக யாரும் இல்லை,
- அல்லாஹ் அவனே முதலானவன், அவனே முடிவானவன்,
- அல்லாஹ் அவனே அகிலங்களை படைத்து பரிபாலிப்பவன்
- அல்லாஹ் அவனே ஜீவராசிகள் அனைத்திற்கும் ரட்சகன்
- அல்லாஹ் அருளானவன், அன்பானவன், அழகானவன்,
- அல்லாஹ் பேராற்றலுடையவன், அண்டங்களின் அதிபதி
- அல்லாஹ்வின் அனுமதியின்றி ஒரு அணுவும் அசையாது
- அல்லாஹ் படைப்பினங்கள் ஒவ்வொன்றையும கண்காணிப்பவன்
- அல்லாஹ் அனைத்து பாக்கியங்களையும் அருள்பவன்
- அல்லாஹ் நம்மை பராமரிப்பவன், நம்மை பாதுகாப்பவன்,
மேற்கண்ட அனைத்து அம்சங்களும் ஒருங்கே கொண்டுள்ள பேராற்றலுடைய அகிலங்களின் இரட்சகனாகிய அல்லாஹ்வை வணங்குகள் அவனைத் தவிர வேறு எதையும் வணங்காதீர்கள் அவ்வாறு வணங்கினால் நீங்கள் வழிதவறிவிடுவீர்கள் என்று இஸ்லாம் போதிக்கிறது இந்த கோட்பாடுதான் தவ்ஹீத் அதாவது இஸ்லாத்தின் முதல் முக்கிய கலிமாவாகிய
லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலில்லாஹ்
(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை நபிகள் நாயகம் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள்)
தவ்ஹீத் கொள்கையை பின்பற்றுபவர்கள் என்ன கூறுகிறார்கள்!
தவ்ஹீத் என்ற அழகான கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் தாமாக எதையும் உருவாக்கிக்கொண்டு பேசுவது கிடையாது மாறாக அவர்கள் அல்குர்ஆனையும், நபிகளார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையான ஹதீஸ்களையும் தீர ஆராய்ந்து அந்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எவ்வாறு வாழந்துக் காட்டி வாழ வலியுறுத்தினார்களோ அதைத்தான் போதிக்கிறார்கள். காரணம் நபி (ஸல்) அவர்களை பின்பற்று பவர்களாகிய நாம் நாமாக, நம் இஷ்டப்படி எதையும் பின்பற்றுவதில்லை எத்திவைப்பதில்லை மாறாக நம் நபிகளாரின் வழிமுறை பின்பற்றுகிறோம். இதோ கீழ்கண்ட இறைவசனத்தை கேளுங்கள்!
அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், ‘இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்’ என்று கூறுகிறார்கள். அதற்கு என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 10:15)
மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் கீழ்கண்டவாறு தவ்ஹீதை ஏற்றுக்கொண்டவர்கள் சத்தியமுழக்கமிடுகிறார்கள் இதோ அந்த சத்திய முழக்கத்தை சற்று நீங்களே சிந்தியுங்கள்!
அல்லாஹ்வுக்கு இணைவைக்காதீர்கள்!
ஏகனாகிய அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள் அதற்காகத்தான் நாம் படைக்கப்பட்டுள்ளோம், நம் வாழ்வும் நம் மரணமும் ஒரு சோதனையாக உள்ளது அந்த சோதனையில் வெற்றி பெற வேண்டுமெனில் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அல்லாஹ்விடமே அருளுதவி தேடுங்கள் என்ற கண்ணியமாக முழக்கமிடுகிறார்கள்.
இந்த சத்திய முழக்கத்தை கேட்டவுடன் இணைவைப்பாளர்களும், மாற்றுமத்தவர்களும் எங்கள் இஷ்ட தெய்வங்களை ஏசுகிறான், இவனுக்கு அனுமதியளித்தது யார்? என்று பேசிக்கொள்கிறார்கள் சற்று கீழ்கண்ட வசனத்தை படித்தால் இவ்வாறு முழக்கமிட சொன்னது யார் என்ற புரியும்! இதோ அந்த வசனம்
நபிகளார் (ஸல்) கூறினார்கள்:
பிரார்த்தனை தான் வணக்கமாகும்‘ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ர) (ஆதார நூல்கள்: அஹ்மத் , திர்மீதி, அபூதாவூத்)
அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்! அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 10:106)
இறந்தோரை பிரார்த்திக்காதீர்கள் தர்காஹ்வை வழிபடாதீர்கள்!
தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் தர்காஹ் வாதிகளை நோக்கி இறந்தோரை பிரார்த்திக்காதீர்கள் அவர்கள் மண்ணோடு மண்ணாகி மக்கிவிட்டார்கள் அவர்களால் எதையும் கேட்க முடியாது, அவர்கள் பதில் அளிக்கமாட்டார்கள் என்று அறிவுரை கூறினால் உடனே தர்காஹ்வாதிகள் என் அவ்லியாவை திட்டுகிறான் இவனுக்கு ஏன் இந்த நெஞ்சழுத்தம் என்று வினவுகிறார்கள். கப்ருகளை வணங்கும் சகோதரர்களே கீழ்கண்ட அருள்மறை குர்ஆனில் உள்ள அல்லாஹ்வின் வார்த்தை கேட்டால் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்!
அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 7:197, 198)
”கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றில் எதனையும் எழுதப்படு வதையும், அதன் மீது கட்டிடம் எழுப்பப்படு வதையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தனர்’ (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி.)
தாயத்து கட்டாதீர்கள்!
தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் தர்காஹ்வாதி களிடம் மந்திரித்த தாயத்துக்களை கட்டாதீர்கள் அது நபிவழிக்கு முற்றிலும் மாற்றமானது இதனால் நீங்கள் சீரழிந்துவிடுவீர்கள் என்று அறிவுரை கூறினால் உடனே தர்காஹ்வாதிகள் உனக்கு இவ்வாறு கூறியவன் யார் என்று கேள்வி எழுப்புவார்கள் அதற்கு பதில் இதோ கீழ்கண்ட எங்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள்தான் நம்மை தாயத்து கட்ட வேண்டாம் என்று ஆணை பிரப்பித்தார்!
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் :
‘தாயத்தை கட்டித் தொங்கவிடுபவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டான்.’அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர் (ரலி), நூல்:முஸ்னது அஹ்மத்
‘தாயத்தை கட்டித் தொங்கவிடுபவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டான்.’அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர் (ரலி), நூல்:முஸ்னது அஹ்மத்
ஷபே பராத் இரவு வேண்டாம், மண்ணரைத் திருவிழா கூடாது!
தவ்ஹீத் என்ற அற்புதமான கொள்கையை ஏற்றுக்கொண்ட நாம் கப்ருகளை வணங்கும் தர்காஹ்வாதிகளையும், மத்ஹபுவாதி களையும் நோக்கி ஷபே பராத் என்ற இரவை நபிகளார் காட்டித் தரவில்லை அன்றைய தினம் மண்ணரைகளில் விழா கொண்டாடுவது காஃபிர்கள் மற்றும் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறை என்று அறிவுரை கூறினால் அதை ஏற்க மறுத்து நம்மை அடிக்க கைகளை ஓங்குகிறார்கள் இவர்கள் ஏன் கீழ்கண்ட வசனத்தை உணர்வதில்லை
அன்னை ஆயிஷா (ரலி) அறிவித்துள்ளார்கள்:-
“எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும். அவை நூறு ஷரத்துகளாயினும் சரியே” என்று நபி அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)
அல்லாஹ் கூறுகிறான்
நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)
மவ்லூது பாடாதீர்கள், கத்தம் பாத்திஹா ஓதாதீர்கள்!
மவ்லூதுகளை பாடி கத்தம் பாத்திஹாக்களையும், நபிகளார் காட்டித்தராத திக்ருகளையும், 1000 முறை கௌது நாயத்தை அழைப்பதையும் கண்டித்து இதனால் நரகம் சித்தப்படும் என்ற எச்சரித்தால் நம்மை நோக்கி தர்காஹ்வாதிகள் மூடர்கள் இவர்கள் புதுமைவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள் ஆனால் இவ்வாறு உண்மையை உணர மறுக்கும் இவர்கள் நபிகளாரின் கீழ்கண்ட அறிவுரையை இதுநாள் வரை உணராதது ஏன்?
எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது என நபி அவர்கள் நவின்றார்கள். (அலி(ரலி) அபூதாவூது, நஸயீ.)
யார் அதிகப்பிரசங்கவாதிகள் தவ்ஹீதை ஏற்றுக்கொண்டவரா?
குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் | இணைவைப்பாளர்கள் மத்ஹபுவாதிகள் |
அல்லாஹ்வை தவிர எதையும் வணங்காதீர்கள்(அல் குர்ஆன் 03-64) | அவ்லியாவையும் வணங்குவோம் |
இறந்தோரை பிரார்த்திக்காதீர்கள் (அல்குர்ஆன் 16-20,21) | இறந்தோர் நமக்கு அருள்புரிவார்கள் |
கப்ருகளை உயர்த்திக் கட்டாதீர்கள்(முஸ்லிம் 1610) | கப்ருகளை உயர்த்திக் கட்டுவோம் |
உயர்த்திக் கட்டப்பட்ட கப்ருகளை தரைமட்டமாக்குங்கள் (முஸ்லிம் 1609) | உயர்த்திக் கட்டப்படட கப்ருகளையும், தர்காஹ்களையும் இடிக்கமாட்டோம்! |
எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது என நபி அவர்கள் நவின்றார்கள். (அலி(ரலி) அபூதாவூது, நஸயீ.) | மார்க்கத்தில் புதுமையை விரும்புவோம் மவ்லூது, கத்தம் பாத்திஹா, கந்தூரி விழா, ஷபே பராத், மண்ணரை திருவிழா 1000 முறை கவுஸ் என்ற அழைப்போம் இன்னும் ஏராளம் இருக்கு அது நம் மூதாதையர்கள் காட்டித்தந்த வழிமுறை அதை விடமாட்டோம்! |
தாயத்தை கட்டித் தொங்கவிடுபவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டான்.’அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர் (ரலி), நூல்:முஸ்னது அஹ்மத் | தாயத்தை கட்டினால் என்ன? தாயத்தை கட்டுவோம், கட்டக்கூடாது என்று கூறுபவர் யார்? |
முடிவுரை
தர்காஹ்வை வணங்கி வந்த என் அருமை சகோதர சகோதரிகளே இந்த அறிவுரை உண்ணிப்பாக படித்த நீங்கள் இனி எந்த வலிமுறையை பின்பற்ற போகிறீர்கள்!
அல்லாஹ்வும் அவனது அனைத்து நபிமார்களும் காட்டித் தந்த வழிமுறையையா? அல்லது அல்லாஹ்வும் அவனது நபிமார்களும் காட்டித்தராத உங்கள் மூதாதையர்கள் பின்பற்றிய கண்மூடித்தனமான குருட்டு வழிமுறையையா?
நீங்கள் எங்கே திசை திருப்பப்படுகிறீர்கள்
இனிப்பு வேண்டுமா? கசப்பு வேண்டுமா என்றால் இனிப்பை அழகாக தேர்ந்தெடுப்பீர்கள்! மானம் வேண்டுமா? அவமானம் வேண்டுமா என்றால் மானம்தான் பெரிது என்பீர்கள்! சுவர்கம் வேண்டுமா? நரகம் வேண்டுமா? என்றால் சுவர்கம்தான் வேண்டும் என்பீர்கள் ஆனால் அந்த சுவர்கத்திற்கு செல்ல நீங்கள் உங்கள் மூதாதையர்கள் பின்பற்றிய மார்க்கத்திற்கு முரணாண காரியங்கள் அனைத்தையும் இன்றே இக்கணமே விட வேண்டும் அதற்கு பதிலாக நபிகாளர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்க வேண்டும் அது எப்படிப்பட்டது இதோ அல்லாஹ் கூறுகிறான் கேளுங்கள்!
(நபியே) மனிதர்களுக்காக அருளப்பட்ட வேதத்தை அவர்கள் சிந்தித்து உணர வேண்டுமென்பதற்காக, தெளிவாக அவர்களுக்கு விளக்கிக் கொடுப்பதற்கே வேதத்தை நாம் உம்மீது அருளினோம். (அல்குர்ஆன், 16:44)
“என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்” என்று நபி அவர்கள் கட்டளையிட்டார்கள். நூல்: புகாரி
அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)
அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் (அந்த) நாளில் அவர்களிடம் (நீங்கள் மக்களுக்கு எனது கட்டளைகளை எடுத்துக் கூறிய போது) “என்ன பதிலளிக்கப்பட்டீர்கள்” என்று கேட்பான். அதற்கு அவர்கள் அது பற்றி எங்களுக்கு எவ்வித ஞானமுமில்லை. நிச்சயமாக நீ தான் மறைவானவற்றை யெல்லாம் அறிந்தவன் என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 5: 109)
(நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்59:7)
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக! புகழனைத்தும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே! அல்ஹம்துலில்லாஹ்!
0 கருத்துரைகள்:
Post a Comment