ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இலங்கை அழைத்துவரப்பட்ட தென்னிந்திய அறிஞர் அல்தாஃபி அவர்கள் இலங்கையில் ஆற்றிய உரைகளின் CD மற்றும் DVDக்களை பெற்றுக்கொள்ள 0771-299562 என்ற தொலை பேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

யாஸீன் அத்தியாயத்தின் சிறப்புகள்.

Tuesday, February 8, 2011


அல்லாஹ் தஆலா இந்தச் சமுதாயத்திற்கு வழங்கியிருக்கும் அருட் கொடைகளில் மிகப்பெரிய அருட் கொடையாக திருக்குர்ஆன் திகழ்கிறது. அந்தக் குர்ஆனை ஓதுபவர்களுக்கு பல சிறப்புகளையும் அல்லாஹ் வழங்கியுள்ளான்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
''யார் அல்லாஹ்வுடைய வேதத்தி­ருந்து ஒரு சொல்லை ஓதுவாரோ அதற்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது அது போல் பத்து மடங்கு வரை உண்டு. 'அ­ஃப் லாம் மீம்' என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அ­ப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்து'' என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ர­)  . நூல்: திர்மிதீ (2835)


இதே போன்று சில குறிப்பிட்ட சூராக்களுக்கு குறிப்பிட்ட சிறப்புகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.                                 

ஆனால் சில அத்தியாயங்களுக்கு ஏராளமான சிறப்புகள் உள்ளதாக சில செய்திகள் உள்ளன. அவைகள் பெரும்பாலும் இட்டுக்கட்டப்பட்டதாகவும் பலவீனமான செய்திகளாகவும் இருக்கின்றன.

குறிப்பாக, திருக்குர்ஆனின் 36வது அத்தியாயமான யாஸீன் அத்தியாயத்திற்கு ஏராளமான சிறப்புகள் உள்ளதாக இடம் பெற்றுள்ளது. அவை அனைத்தும் ஆதாரமற்ற செய்திகளாகவே இடம் பெற்றுள்ளன.
இன்று யாஸீன் அத்தியாயம் தொடர்பாக வந்துள்ள இட்டுக் கட்டப்பட்ட, பலவீனமான செய்திகளை அடிப்படையாக வைத்து தான் மக்கள் பல அமல்களைச் செய்து வருகின்றனர். எனவே யாஸீன் தொடர்பாக வந்துள்ள செய்திகளின் தரத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆனின் இதயம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொன்றுக்கும் ஒரு இதயம் இருக்கிறது. குர்ஆனுடைய இதயம் (சூரா) யாஸீனாகும். யார் யாஸீன் (சூராவை) ஓதுகிறாரோ அதை ஓதியதற்காக அவர் பத்து தடவை குர்ஆனை ஓதிய நன்மையை அல்லாஹ் பதிவு செய்கிறான்.
நூல்கள்: திர்மிதீ 2812, தாரமி 3282

இதன் ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் ஹாரூன் அபீ முஹம்மத் என்பவர் இடம் பெறுகிறார். இவர் யாரென்று அறியப்படாதவர். இதைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்களே அந்தச் செய்தியின் இறுதியில் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் தாரமியில் இடம் பெறும் ஹதீஸிலும், யார் என அறியப்படாத ஹாருன் அபீ முஹம்மத் என்பவரே இடம் பெறுவதால் இதுவும் பலவீனமாதாகும்.

''சூரா பகரா குர்ஆனுடைய திமிழாகும். மேலும் அதில் உயர்வானதுமாகும். சூரத்துல் பகராவின் ஒவ்வொரு ஆயத்துடன் எண்பது மலக்குகள் இறங்கிறார்கள். இன்னும் 'அல்லாஹு லாயிலாஹு இல்லாஹுவ அல் ஹய்யுல் கையூம்' என்ற வசனம், அர்ஷின் கீழ் இருந்து எடுக்கப்பட்டு பகரா அத்தியாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. யாஸீன் குர்ஆனுடைய இதயமாகும், யார் அல்லாஹ்வுடைய பொருத்தத்தையும் மறுமையும் நாடி அதை ஓதுகிறாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப் படும். (எனவே) அதை உங்களில் மரண நெருக்கத்தில் உள்ளவர்களுக்கு ஓதுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(நூல்கள்: அஹ்மத் (19415), முஸ்னத் ரூயானி பாகம்:2, பக்கம்:323, அல்முஃஜமுல் கபீர் லி தப்ரானீ, பாகம்: 20, பக்கம்: 219, 220, 230 ஷுஅபுல் ஈமான் பாகம்:2, பக்கம்: 478)

இதன் அறிவிப்பாளர் தொடரில் ஒரு மனிதர் அறிவிக்கிறார் என்றும் அவர் தம் தந்தையிடமிருந்து அறிவிக்கிறார் என்றும் இடம் பெற்றுள்ளது. இதில் ஒரு மனிதர் யார்? அவரின் தந்தை யார்? அவரின் நம்பகத்தன்மை எத்தகையது? என்ற கேள்விகள் எழும். இது போன்ற முகவரி இல்லாதவர்களின் செய்திகளை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்பதில்லை. 

இதே செய்தி அஹ்மத் (19427), அபூதாவூத் (2714), இப்னு மாஜா (1438), பைஹகி பாகம்: 3, பக்கம் 383, இப்னு ஹிப்பான் பாகம்: 7, பக்கம்: 269லும் இடம் பெற்றுள்ளது. 

இவற்றில் ஒரு மனிதர் என்ற இடத்தில் அபூஉஸ்மான் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரும் யாரென அறியப் படாதவரே! இவரின் நம்பகத்தன்மையும் உறுதி செய்யப்படாததால் இச்செய்தியும் பலவீனமடைகிறது.

இந்தச் செய்தி தொடர்பாக ஹாபிழ் இப்னு ஹஜர் பின்வருமாறு கூறுகிறார்கள்: இந்தச் செய்தி நபித்தோழர் கூற்றாகவும், நபிகளாரின் கூற்றாகவும் குழப்பி அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் அபூஉஸ்மான் என்பரின் நிலையும் அவரின் தந்தையின் நிலையும் அறியப்படவில்லை என்று இப்னுல் கத்தான் அவர்கள் குறை கூறியுள்ளார்கள். ''இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகவும் அதில் குறிப்பிட்டுள்ள செய்தி அறிய முடியாததாகவும் உள்ளது. மேலும் இது தொடர்பான எந்தச் செய்தியும் ஆதாரப் பூர்வமானது அல்ல!' என்று தாரகுத்னீ அவர்கள் கூறியுள்ளார்கள்.
(நூல்: தல்கீஸுல் ஹபீர் பாகம்: 2, பக்கம்:104)

பத்து குர்ஆனை ஓதிய நன்மை
''யார் யாஸீன் அத்தியாயத்தை ஓதுகிறாரோ அவர் பத்து தடவை குர்ஆனை ஓதியவரைப் போன்றவர் ஆவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: ஷுஅபுல் ஈமான், பாகம்: 2, பக்கம்: 479)

இதைப் பதிவு செய்த ஆசிரியர் அவர்களே இதை முர்ஸல் வகையைச் சார்ந்தது என்று கூறியிருக்கிறார். அதாவது நபித்தோழர் அல்லாத ஒருவர் நபிகளார் கூறியதாகச் சொல்வது. இது ஆதாரத்திற்கு ஏற்றது அல்ல! ஏனெனில் நபிகளார் கூறியதை நபித்தோழர்கள் மட்டுமே கேட்டிருக்க முடியும்.

மேலும் இந்தச் செய்தி சுனன் ஸயீத் பின் மன்சூர் என்ற நூ­ல் பாகம்:2, பக்கம்:278ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தச் செய்தியின் கீழ் அதன் ஆசிரியர் 'இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது' என்று குறிப்பிட்டு உள்ளார்கள்.
மேலும் இந்தச் செய்தியில் இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் ஹிஜாஸ் மற்றும் வேறு ஊர்வாசிகள் வழியாக அறிவித்தால் பலவீனமாகும். இந்தச் செய்தியில் இடம் இஸ்மாயில் பின் அய்யாஷ் என்பவர் யாரிடம் செவியுற்றாரோ அந்த ஸயீத் என்பவர் ஜவ்ஸஸான் என்ற ஊரில் பிறந்து மக்காவில் இறந்தவராவார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 4, பக்கம்:78)

எனவே இந்தச் செய்தி மேலும் பலவீனமடைகிறது. 

மேலும் இந்தச் செய்தி இப்னு ஹிப்பான், பாகம்: 6, பக்கம்: 312ல் இடம் பெற்றுள்ளது. இதில் ஹஸன் அவர்கள் ஜுன்துப் (ர­) வழியாகக் கேட்டதாக இடம்பெற்றுள்ளது.
ஹஸன் அவர்கள் தத்லீஸ் செய்பவர்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப் பாகம்: 1, பக்கம்: 160)

தத்லீஸ் என்பது ஒருவர், தான் நேரடியாகக் கேட்காத ஒருவரிடமிருந்து, கேட்டிருக்கவும் கேட்காமல் இருப்பதற்கும் வாய்ப்புள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவிப்பார். எனவே இவர் போன்றவர்கள் தனக்கு அடுத்து வரும் அறிவிப்பாளரிடம் நான் செவியுற்றேன், அவர் எனக்கு அறிவித்தார் என்று தெளிவாகக் கூறினால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். இந்தச் செய்தியில் ஹஸன் அவர்கள் தனக்கு அடுத்து வரும் அறிவிப்பாளர் ஜுன்துப் (ர­) அவர்களிடம் நேரடியாகக் கேட்டேன் என்ற வாசகத்தில் கூறாததால் இச்செய்தி பலவீனம் அடைகிறது.

மேலும் இச்செய்தி தப்ரானீ அவர்களின் அல்முஃஜமுஸ் ஸகீர் பாகம்: 1, பக்கம்: 255, மற்றும் அல்முஃஜமுல் அவ்ஸத் பாகம்: 4, பக்கம்: 21 ஆகிய நூல்களிலும் வேறொரு வழியாக வந்துள்ளது. எனினும் இதன் அறிவிப்பாளர் தொடரில் அக்லப் இப்னு தமீம் என்பவர் இடம் பெறுகிறார். இவரும் பலவீனமானவரே. (நூல்: அல்லுஅஃபாவு வல்மத்ருகீன்லிநஸயீ, பாகம்:1, பக்கம்:20)

இன்னும் இதே ஹதீஸ் ஷுஅபுல் ஈமான் பாகம்: 2, பக்கம்: 481ல் இடம் பெற்றுள்ளது. இதிலும் மேலே விமர்சனம் செய்யப்பட்ட யாரென அறியப்படாத அபூ உஸ்மான் என்பவரே இடம் பெற்றுள்ளார்.

தட்டில் எழுதி கரைத்துக் குடியுங்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ''சூரத்துல் யாஸீனை, தவ்ராத்தில் 'அல் முயிம்மா' (அனைத்தையும் சேர்த்துக் கொள்ளக்கூடியது) என்று அழைக்கப் படும்'' என்று கூறினார்கள். அப்போது, 'முயிம்மா' என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு, ''அதனை ஓதக் கூடியவருக்கு இம்மை மறுமையின் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். இம்மை மற்றும் மறுமையின் அனைத்து துன்பங்களும் நீங்கி விடும். மறுமையின் பயங்கர சூழ்நிலையும் விலகி விடும்'' என்று பதிலளித்தார்கள்.

''இன்னும் இந்த சூரா தாஃபிஅத்துல் காழிஆ (விதியை மாற்றக்கூடியது) என்று அழைக்கப் படும். அதாவது அதனை ஓதக் கூடியவருக்கு (தீங்கை) தடுக்கும், அவரின் தேவைகளை நிறைவேற்றும். யார் அதனை ஓதுகிறாரோ அவர் பத்து ஹஜ் செய்தவரைப் போன்றவராவார். யார் அதை ஓதக் கேட்கிறாரோ அவருக்கு ஆயிரம் தீனார் அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்ததன் (நன்மை) எழுதப்படும்.

இன்னும் யார் அதை எழுதி, பின்பு குடித்து விடுகிறாரோ அவருடைய உள்ளத்தில் ஆயிரம் மருந்துகள் நுழைந்து விட்டன. ஆயிரம் ஒளியும், ஆயிரம் உறுதியும், ஆயிரம் பரகத்தும் ஆயிரம் ரஹ்மத்தும் அவருக்குக் கொடுக்கப்படும். இன்னும் அவரை விட்டும் ஒவ்வொரு நோயும் மோசடித் தன்மையும் நீங்கி விடும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: ஷுஅபுல் ஈமான், பாகம்: 2, பக்கம்: 480)

இதனைப் பதிவு செய்த ஆசிரியர் அவர்கள், இந்த ஹதீஸின் அடிக் குறிப்பில் ''இந்தச் செய்தியை சுலைமான் என்வரிடமிருந்து முஹம்மத் பின் அப்திர்ரஹ்மான் என்பவர் மட்டுமே அறிவிக்கிறார். இவர் நிராகரிக்கப் பட்டவர்'' என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இதே செய்தியை வேறு அறிவிப்பாளர் வழியாக கதீப் பக்தாதி அவர்கள் தனது 'தாரீக் பக்தாத்' என்ற நூ­ல் பதிவு செய்துள்ளார்கள். (பாகம்:2, பக்கம்: 387)
அதன் கீழே 'இந்த அறிவிப்பாளர் வரிசை பொய்யானதாகும்' என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள். 

மலக்குகள் கலந்து கொள்வார்கள்
''ஒவ்வொன்றுக்கு ஒரு இதயம் உண்டு. திருக்குர்ஆனின் இதயம் யாஸீன் அத்தியாயமாகும். யார் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதை ஓதுவாரோ அவரை மன்னிப்பான். அவர் திருக்குர்ஆனை 12 தடவை ஓதிய கூ­யை கொடுப்பான். எந்த முஸ்­ம் (மரணத் தறுவாயில் இருப்பவரிடம்) இதை ஓதுவாரோ அங்கு மலக்குல் மவ்த் (உயிரை கைப்பற்றும் வானவர்) யாஸீனைக் கொண்டு இறங்குவார். யாஸீனின் ஒவ்வொரு வசனத்தையும் 12 மலக்குகள் கொண்டு இறங்குவார்கள். அவர்கள் அவருக்கு முன்னால் அணி வகுத்து நிற்பார்கள். அவருக்காக அருளை வேண்டுவார்கள். பாவமன்னிப்பு கேட்பார்கள். அவரை குளிப்பாட்டும் போது கலந்து கொள்வார்கள். ஜனாஸாத் தொழுகையிலும் அடக்கம் செய்வதிலும் கலந்து கொள்வார்கள். யார் மரண நெருக்கத்தில் இருப்பவரிடத்தில் யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருடைய உயிரை சுவர்க்கத்தின் காவலாளி சுவர்க்கத்தின் பானத்தைக் கொண்டு வந்து அவரின் விரிப்பில் அவர் இருக்கும் நிலையில் அதை அருந்தும் வரை மலக்குல் மவ்த் கைப்பற்ற மாட்டார். அவர் தாகம் தீர்ந்தவராக இருக்கும் நிலையில் அவரின் உயிரை மலக்குல் மவ்த் கைப்பற்றுவார். அவர் தாகம் தீர்ந்தவராகவே கப்ரில் தங்கியிருப்பார். மறுமை நாளில் தாகம் தீர்ந்தவராகவே எழுப்பப்படுவார். இவர் நபிமார்களின் (தாகம் தீர்க்கும்) தடாகத்தின் பக்கம் தேவைப்பட மாட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: முஸ்னத் ஷிஹாப் பாகம்: 2, பக்கம்:130)

இதன் அறிவிப்பாளர் தொடரில் முகல்லத் பின் அப்துல் வாஹித் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பொய்யராவார். (நூல்: ­ஸானுல் மீஸான் பாகம்: 6, பக்கம்: 8)
மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றிருக்கும் அ­ பின் ஸைத் அல் ஜுத்ஆன் என்பவரும் பலவீனமானவரே! (நூல்: அல்லுஃபாவு வல் மத்ருகீன் பாகம்: 2 பக்கம்: 193)

பாவங்கள் மன்னிக்கப்படும்
''யார் இரவில் யாஸீன் சூராவை ஓதுகிறாரோ அவர் காலையில் மன்னிக்கப்பட்டவராகி விடுகிறார். யார் துகான் அத்தியாயத்தை இரவில் ஓதுகிறாரோ அவர் காலையில் மன்னிக்கப்பட்டவராகி விடுகிறார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(நூல்: முஸ்னத் அபீ யஃலா பாகம்: 11, பக்கம்: 93)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் ஹிஸாம் பின் ஸியாத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று அபூஸுர்ஆ, புகாரி போன்றோர் விமர்சனம் செய்துள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் பாகம்: 11, பக்கம்: 36)

இதே செய்தியை இமாம் பைஹகீ தனது 'ஷுஅபுல் ஈமான்' பாகம்: 2, பக்கம்: 484ல் பதிவு செய்து விட்டு, இதை ஹிஷாம் என்பவர் தனித்து அறிவிக்கிறார், இவர் பலவீனமானவர் ஆவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். 
மேலும் இதே செய்தி தப்ரானீ அவர்களின் அல்முஃஜமுஸ் ஸகீர் பாகம்: 1, பக்கம்: 255ல் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் 'அக்லப் பின் தமீம்' என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நிராகரிக்கப் பட்டவர். மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் ஜிஸ்ர் பின் பர்கத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவரே. (நூல்: லுஅஃபாவுல் உகை­, பாகம்: 1, பக்கம்: 203)
யார் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி இரவிலே யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப் பட்டு விடும். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­)
நூல்: தாரமி (3283)

இச்செய்தியை அபூஹுரைரா (ர­) அவர்களிடமிருந்து ஹஸன் அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆனால் இவர் அபூஹுரைரா (ர­) அவர்களிடமிருந்து எந்தச் செய்தியையும் செவியுறவில்லை.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 2, பக்கம்: 231)

எனவே இந்தச் செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும்.

அல்லாஹ் ஓதிய அத்தியாயம்
''அல்லாஹ் தஆலா இந்த வானம் பூமி படைக்கப்படுவதற்கு ஆயிரம் வருடத்திற்கு முன் யாஸீன் அத்தியாயத்தையும் தாஹா அத்தியாயத்தையும் ஓதினான். மலக்குமார்கள் (இந்தக்) குர்ஆன் வசனங்களை கேட்டவுடன், 'இந்த அத்தியாயம் எந்த உம்மத்திற்கு இறங்குகிறதோ அந்த உம்மத்திற்கு சுபச்செய்தி உண்டாவதாக! எந்த உள்ளம் இதை சுமக்கிறதோ அதற்கும் சுபச்செய்தி உண்டாவதாக! எந்த நாவு இதை ஓதுகிறதோ அதற்கும் சுபச்செய்தி உண்டாவதாக!' என்று சொன்னார்கள்'' என நபிகளார் கூறினார்கள்.
(நூல்: தாரமி 3280)

இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்ராஹீம் பின் முஹாஜிர் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் பாகம்: 1, பக்கம்: 147)

மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் உமர் பின் ஹப்ஸ் என்பவரும் இடம் பெறுகிறார். இவரும் பலவீனமானவரே! (நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ருகீன் லி இப்னுல் ஜவ்ஸீ, பாகம்:2, பக்கம்: 206) 

தேவைகள் நிறைவேற்றப்படும்
''யார் பக­ன் ஆரம்ப நேரத்தில் யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருடைய தேவைகள் நிறைவேற்றப் படும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: தாரமி 3284)

இந்தச் செய்தியை நபிகளார் கூறியதாக அறிவிக்கும் அதா பின் அபீ ரபாஹ் என்பவர் நபித்தோழர் இல்லை. நபிகளாரின் செய்திகளை நபித்தோழர்கள் மட்டுமே கேட்டிருக்க முடியும். எனவே இந்தச் செய்தி முர்ஸல் எனும் பலவீனமான வகையைச் சார்ந்ததாகும். 

பெற்றோர் பாவங்கள் மன்னிக்கப்படும்
''யார் தன்னுடைய தாய், தந்தையர்களில் ஒருவரின் கப்ரையோ அல்லது இருவரின் கப்ரையோ வெள்ளிக்கிழமை தோறும் சந்தித்து, அங்கு யாஸீன் அத்தியாயத்தை ஓதினால் ஒவ்வொரு ஆயத் அல்லது எழுத்து அளவுக்குப் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் அபூபக்கர் (ர­)
நூல்: தபகாத்துல் முஹத்தீஸீன் பி உஸ்பஹான், பாகம்: 3, பக்கம்: 331

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அம்ரு பின் ஸியாத் அல் பக்கா­ என்பவர் பொய்யராவார். (நூல்: அல்காமில் பீ லுஅபாஇர் ரிஜால் லி இப்னு அதீ, பாகம்: 5, பக்கம்: 151, மீஸானுல் இஃதிதால் பாகம்: 5, பக்கம்:316)

கப்ர் வேதனை குறைக்கப்படும்
''யார் கப்ருகளின் பக்கம் சென்று (அங்கு) யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்கு அன்றைய நாள் வேதனை (கப்ராளிகளுக்கு) இலேசாக்கப்படும். அதில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் அவருக்கு நன்மைகள் இருக்கின்றன'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மா­க்(ர­)
நூல்: தப்ஸீர் ஸஃலபி.  பாகம்: 3, பக்கம்: 161

இச்செய்தியில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் அய்யூப் பின் மித்ரக் என்பவர் பொய்யராவார். (நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 1, பக்கம்:463)
மேலும் இச்செய்தியில் இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் அபூஉபைதா மற்றும் ஆறாவது அறிவிப்பாளர் முஹம்மத் பின் அஹ்மத் அர்ரியாஹீ ஆகியோரின் நம்பகத் தன்மையைப் பற்றி (நாம் பார்த்த வரை) எந்த நூ­லும் குறிப்பிடப்படவில்லை. எனவே இது இன்னும் பலவீனம் அடைகிறது.

ஷஹீதாக மரணிப்பார்
''யார் தொடர்ந்து ஒவ்வொரு இரவிலும் யாஸீன் அத்தியாயத்தை ஓதி வந்து மரணித்து விட்டால் அவர் ஷஹீதாக மரணித்தவராகக் கணிக்கப் படுவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அல்முஃஜமுஸ் ஸகீர்லிதப்ரானீ
பாகம்: 2, பக்கம்: 191

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் ஸயீத் பின் மூஸா அல் அஸ்தி என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பொய்யராவார். (நூல்: ­ஸானுல் மீஸான், பாகம்: 3, பக்கம்: 44)

யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு தொடர்பாக நபிகளார் சொன்னதாக பல செய்திகளைப் பார்த்தோம். இதைப் போன்று நபிகளார் அல்லாத பலரும் இது தொடர்பாக பல செய்திகளைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றையும் பார்ப்போம். 

பிரசவ வேதனை குறையும்
யார் யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்குப் பாவங்கள் மன்னிக்கப்படும். யார் பசியுள்ள நிலையில் அதை ஓதுவாரோ அவர் வயிறு நிரம்புவார். யார் வழி தவறிய நிலையில் ஓதுவாரோ அவர் வழியை அடைந்து கொள்வார். யார் பொருளைத் தவற விடுவாரோ அதை அவர் பெற்றுக் கொள்வார். உணவு குறைந்து விடும் என பயந்து உணவிருக்குமிடத்தில் அதை ஓதுவாரோ அவர் அதைப் போதுமானதாகப் பெற்றுக் கொள்வார். இறந்தவரிடத்தில் ஓதினால் வேதனை இலேசாகும். பிரசவ வேதனையில் இருக்கும் பெண்ணிடம் ஓதினால் அவருடைய பிரசவம் லேசாகும். மேலும் யார் யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவர் குர்ஆனை பதினொரு தடவை ஓதியவர் போன்றவராவார். ஒவ்வொன்றுக்கும் இதயம் இருக்கிறது. குர்ஆனுடைய இதயம் யாஸீன் ஆகும் என்று அபூகிலாபா என்பார் கூறுகிறார்.
நூல்: ஷுஅபுல் ஈமான்.  பாகம்: 5., பக்கம்: 478

இந்த ஹதீஸை அபூகிலாபா என்பவர் அறிவித்துள்ளார். இவர் தாபியீ ஆவார். (நபித்தோழர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தவர்) ஒரு அத்தியாயத்திற்குக் குறிப்பிட்ட சிறப்புகள் உள்ளது என்று கூற வேண்டுமானால் அல்லாஹ்வோ அல்லது அவனது தூதரோ மட்டுமே கூற முடியும். எனவே அபூகிலாபா அவர்களின் கருத்தை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.
மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் கலீல் பின் முர்ரா என்பவர் இடம் பெறுகிறார். இவரை புகாரி உட்பட பலர் விமர்சனம் செய்துள்ளனர்.   (நூல்: தஹ்தீப் தஹ்தீப், பாகம்: 3,  பக்கம்: 146)

முழுக் குர்ஆன் ஓதிய நன்மை
யார் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி இரவிலே யாஸீன் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப் பட்டு விடும். மேலும் அது முழு குர்ஆனை ஓதியதற்குச் சமமாகும் என்று ஹஸன் பஸரி அவர்கள் கூறுகிறார்கள். (நூல்: தாரமி 3281)

இது ஹஸன் அவர்களின் சொந்தக் கூற்றாகும். நபிகளார் சொல்லாததால் இந்தக் கருத்தை ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியாது.
மேலும் இச்செய்தியில் அபுல் வலீத் மூஸா பின் கா­த் என்பவர் இடம் பெறுகிறார். இவர் யாரென்று அறியப் படாதவர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 10, பக்கம்: 304)

இறந்தவருக்கு ஓதுங்கள்
இறக்கும் நிலையில் உள்ளவரிடம் யாஸீன் அத்தியாயத்தை யார் ஓதுவாரோ அவருடைய வேதனைகள் குறைக்கப்படும் என்று அபூதர்தா (ர­) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்னத் அல் பிர்தவ்ஸ், பாகம்: 4 பக்கம்: 32)

இதன் அறிவிப்பாளர் தொடரில் மர்வான் பின் ஸா­ம் என்பவர் இடம் பெறுகிறார். இவரை புகாரி போன்றோர் 'நிராகரிக்கப்பட்டவர்' என்று கூறுகிறார்கள். தாரகுத்னீ அவர்கள் இவரை 'கைவிடப்பட்டவர்' என்று கூறுகிறார்கள். (நூல்: அல்லுஅஃபாவு வல்மத்ருகீன், பாகம்: 3, பக்கம்: 113) 
மேலும் இது நபித்தோழரின் சொந்த கூற்றே தவிர நபிகளாரின் கூற்று அல்ல என்பதையும் கவனத்தில் கொள்க!

சுவர்க்கவாதிகள் ஓதும் அத்தியாயம்
யாஸீன் அத்தியாயம், தாஹா அத்தியாயம் ஆகிய இரண்டு அத்தியாயத்தைத் தவிர மற்ற குர்ஆன் அத்தியாயங்கள் சுவர்க்கவாசிகளை விட்டும் உயர்த்தப்படும் என்று ஷஹ்ர் பின் ஹவ்ஷப் என்பார் அறிவிக்கிறார்.  (நூல்: பழாயிலுல் குர்ஆன் காஸிம் பின் ஸலாம், பாகம்: 1, பக்கம்: 447)

இது ஷஹ்ர் பின் ஹவ்ஷப் என்பவரின் சொந்தக் கூற்றாகும். இவர் நபித்தோழர் கூட கிடையாது. இவர் நபித்தோழர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தவர். இவரின் கூற்று மார்க்க ஆதாரமாக ஆகாது.

மகிழ்ச்சிக்கு ஓர் அத்தியாயம்
யார் யாஸீன் அத்தியாயத்தை காலையில் ஓதுவாரோ அவர் மாலை வரை சந்தோஷமாக இருப்பார். யார் மாலையில் ஓதுவாரோ அவர் காலை வரை சந்தோஷமாக இருப்பார் என்று யஹ்யா பின் கஸீர் என்பார் அறிவிக்கிறார். 
நூல்: பழாயிலுல் குர்ஆன் லி முஹம்மத் பின் லரீஸ், பாகம்: 1, பக்கம்: 230

இது யஹ்யா பின் அபீ கஸீர் என்பவரின் சொந்த கூற்றாகும். இவர் நபித்தோழர் கூட கிடையாது. இவர் நபித்தோழர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தவர். இவரின் கூற்று மார்க்க ஆதாரமாக ஆகாது.

மேற்கூறிய செய்திகளை வைத்துத் தான் யாஸீன் அத்தியாயத்தை பல சந்தர்ப்பங்களில் மக்கள் ஓதி வருகிறார்கள். ஆனால் யாஸீன் அத்தியாயத்திற்குத் தனியான சிறப்புகள் உள்ளதாக ஆதாரப்பூர்மான எந்தச் செய்தியும் இல்லை.

பொதுவாக திருக்குர்ஆன் வசனங்களை ஓதினால் ஒரு எழுத்திற்குப் பத்து நன்மைகள் உண்டு. அந்த சிறப்பு யாஸீன் அத்தியாயத்திற்கும் உண்டு. இது தவிர வேறு தனியான எந்தச் சிறப்பையும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் காண முடியவில்லை. எனவே ஆதாரமற்ற செய்திகளை அடிப்படையாகக் கொண்டு எந்த அமலையும் செய்யக்கூடாது.

உமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர்! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.
(அல்குர்ஆன் 17:36)

ஆகையால் நாம், ஆதாரப்பூர்வமான செய்திகளை வைத்து நம்முடைய அமல்களை அமைத்து கொள்வோமாக.

Thanks to: www.rasminmisc.tk

0 கருத்துரைகள்:

Post a Comment

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

  © SLTJ Head Office Web site

Site Designed and Developed by
MSM SAFWAN 2009

Back to TOP